எங்கே எனது கவிதை…

ஓர் அந்திமாலைப் பொழுதில்
யாருமில்லா தனிமையில்
நான்…
 
கடற்காற்றும் என்
கண்ணீரும் கதைத்துக்
கொண்டிருக்க…
 
மெல்ல மெல்ல உன்
நினைவுகளோடு நீச்சலடித்துக்
கொண்டிருந்தேன்…
 
எப்பொழுதும் உன்
நினைவாகவே நான்,
எப்பொழுதாவ‌து
நினைப்பாயா நீ…
 
அர்த்தசாம அரட்டை
பேச்சுக்கள்
அன்று…
 
பகிர்ந்து கொள்ள பல‌
இருந்தும் மெள‌ன‌மாய்
இன்று…
 
கருணை கசிந்த‌ விழிக‌ள்
தோழமை தாங்கிய‌ தோள்க‌ள்
பாச‌ம் போதித்த‌ ஸ்ப‌ரிச‌ங்க‌ள்
என…
 
அளப்ப‌ரியா ஆனந்தத்தோடு
அன்று
ஏனோ இழந்தோம்
இன்று…
 
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று செய்கிறாய்…
 
அனுதினமும்
அன்பை வேண்டி
மல்லுகட்டி நிற்பேனோ
மண்டியிட்டுப் போவேனோ!
 
வாடைக் காற்றுப்பட்டு
வர்ணம் மாறிய‌
வண்ணத்துப்பூச்சி ஒன்று…
 
த‌ன் மொழிகளுக்கு
முகத்திரையிட்டு
மெளன ராகம்
பாடுகிறது…
 
நானோ சொல்லாமலே
விடு பட்டுப்போன‌
என் பிரியங்களுக்கு
இரங்கற்பா இசைத்துக்
கொண்டிருக்கிறேன்…
 
என் சுவாசம் தீரும்
சுப வேளையிலாவது
சொல்லிவிடு…
 
எனக்கான பிரியத்தை
எங்கே வைத்திருந்தாய்
என்று…
Advertisements

துளிப்பா – 1

சாதிக‌ள் இல்லைய‌டி
பாப்பா!
எல்லா ம‌க்க‌ளும்
மேன்மக்க‌ளே!
உத்தப்‌புர‌ம்,பாப்பாப‌ட்டி,கீரிப்ப‌ட்டி.

            ~~~
 
எங்கள் வீட்டு நீருக்கும்
நிறமுண்டு
சாயப்ப‌ட்ட‌றைக் க‌ழிவுக‌ள்.
            ~~~
 
குஞ்சு மிதித்து
முட‌மான கோழிக‌ள்
முதியோர் இல‌ல‌ம்.
            ~~~
 
கோழி மிதித்து
முட‌மான குஞ்சுக‌ள்
குழந்தைக‌ள் காப்ப‌க‌ம்.
            ~~~
 
ந‌வ‌ம்ப‌ர் 14
குழந்தைக‌ள் தின விழா
சிவ‌காசியில் கோலாக‌ல‌ம்.
            ~~~
 
நகரெங்கும் பால‌ம்
அமைப்போம்.
அந்த‌ காண்டிராக்டில்
ஓர் ஊழல் செய்வோம்.
அர‌சிய‌ல்வாதி.
            ~~~