பிரிவின் பயணம்

எதுவும் மாறவில்லை

பின் இரவில் கசியும்
இன்னிசையில்,

ப‌றிமாறிக்கொண்ட
க‌டைசி முத்தத்தின்
ருசியில்,

மதுக்கோப்பையின்
ஒரு கடைசித் துளியில்,

ஒரு பொன்நிறவு
பொழுதில் நிகழ்ந்த,
புணர்ச்சியின்
உச்சத்தில்முனகிய
மெல்லிசையில்,

என் உயிர் வலித்த
உன்மத்த நிலையில்,

பித்தனைப்போல்
உன் பிம்பம்
தேடி அலைகிறேன்

ம்..ம்..ம்
எதுவுமே மாறவில்லை
மிக அரிதாகவே
நிகழும் நம்
சந்திப்புகள் உட்பட…

ம்..ம்..ம்
நீ வ‌ருவ‌த‌ற்கான‌ எந்த
முகாந்திரமும் தெரிவ‌தாய்
இல்லை.

ஒரு
அர‌வ‌ம‌ற்ற‌ ந‌டுநிசியின்
நில‌வொளியில்,

இல‌க்கில்லாம‌ல்,
திசைய‌றியாம‌ல்
வெறுமையாய் தொட‌ர்கிற‌து
என் ப‌ய‌ணம்
உன் நினைவுகளைச்
சுமந்தபடி.

Advertisements

நிழலான நிஜங்கள்

நிஜம்
ந‌ம‌க்குள் விள‌க்க‌முடியாத
ஒரு உற‌விருப்ப‌‌தும்
நிஜ‌ம்.

அதீத‌மாய் நானுன்னை
நேசித்த‌தும் நிஜ‌ம்
அதை நிஜ‌மென‌ நீ
ந‌ம்ப‌ம‌றுத்த‌தும் நிஜ‌ம்.

விருப்ப‌மில்லாம‌லே
நீயென்னை வீசியெறிந்த‌தும்
நிஜ‌ம்.

நீயும் நீ சார்ந்த‌வைக‌ள்தான்
என் உலகம் என்ப‌தும் நிஜம்,
அவையின்றி சுக‌வீன‌மாய்
நான் இருப்ப‌தும் நிஜ‌ம்.

ந‌ம் உற‌வு முறிந்த‌
ஒரு க‌ருப்பு நாளில்
க‌த‌றிய‌ழுத‌ என் க‌ண்க‌ளில்
உன‌க்கான் ஈர‌ம் இன்னும்
மிச்ச‌மிருப்ப‌தும் நிஜ‌ம்.

நீ வில‌கிச்செல்லும்
ஒவ்வொரு த‌ருண‌மும்
நான் ம‌ர‌ண‌த்தை
நெருங்கிக்கொண்டுருப்ப‌தும்
நிஜ‌ம்.

உயிர் பிரியும்வ‌ரை நியென்
உட‌னிருப்பாய் என‌ நான்
ந‌ம்பிய‌தும் நிஜ‌ம்,
அது பொய்யென என்
உயிர் கிழித்த‌தும் நிஜ‌ம்.

நீ என்னை ஏற்கும்
திருநாள் காணும் வ‌ரை
கால‌ன் அவ‌ன் க‌ர‌ங்க‌ளில்
சிறைப்ப‌ட‌ ம‌றுக்கிற‌த‌டி
என் ம‌ன‌ம்.

எங்கே எனது கவிதை…

ஓர் அந்திமாலைப் பொழுதில்
யாருமில்லா தனிமையில்
நான்…
 
கடற்காற்றும் என்
கண்ணீரும் கதைத்துக்
கொண்டிருக்க…
 
மெல்ல மெல்ல உன்
நினைவுகளோடு நீச்சலடித்துக்
கொண்டிருந்தேன்…
 
எப்பொழுதும் உன்
நினைவாகவே நான்,
எப்பொழுதாவ‌து
நினைப்பாயா நீ…
 
அர்த்தசாம அரட்டை
பேச்சுக்கள்
அன்று…
 
பகிர்ந்து கொள்ள பல‌
இருந்தும் மெள‌ன‌மாய்
இன்று…
 
கருணை கசிந்த‌ விழிக‌ள்
தோழமை தாங்கிய‌ தோள்க‌ள்
பாச‌ம் போதித்த‌ ஸ்ப‌ரிச‌ங்க‌ள்
என…
 
அளப்ப‌ரியா ஆனந்தத்தோடு
அன்று
ஏனோ இழந்தோம்
இன்று…
 
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று செய்கிறாய்…
 
அனுதினமும்
அன்பை வேண்டி
மல்லுகட்டி நிற்பேனோ
மண்டியிட்டுப் போவேனோ!
 
வாடைக் காற்றுப்பட்டு
வர்ணம் மாறிய‌
வண்ணத்துப்பூச்சி ஒன்று…
 
த‌ன் மொழிகளுக்கு
முகத்திரையிட்டு
மெளன ராகம்
பாடுகிறது…
 
நானோ சொல்லாமலே
விடு பட்டுப்போன‌
என் பிரியங்களுக்கு
இரங்கற்பா இசைத்துக்
கொண்டிருக்கிறேன்…
 
என் சுவாசம் தீரும்
சுப வேளையிலாவது
சொல்லிவிடு…
 
எனக்கான பிரியத்தை
எங்கே வைத்திருந்தாய்
என்று…

துளிப்பா – 1

சாதிக‌ள் இல்லைய‌டி
பாப்பா!
எல்லா ம‌க்க‌ளும்
மேன்மக்க‌ளே!
உத்தப்‌புர‌ம்,பாப்பாப‌ட்டி,கீரிப்ப‌ட்டி.

            ~~~
 
எங்கள் வீட்டு நீருக்கும்
நிறமுண்டு
சாயப்ப‌ட்ட‌றைக் க‌ழிவுக‌ள்.
            ~~~
 
குஞ்சு மிதித்து
முட‌மான கோழிக‌ள்
முதியோர் இல‌ல‌ம்.
            ~~~
 
கோழி மிதித்து
முட‌மான குஞ்சுக‌ள்
குழந்தைக‌ள் காப்ப‌க‌ம்.
            ~~~
 
ந‌வ‌ம்ப‌ர் 14
குழந்தைக‌ள் தின விழா
சிவ‌காசியில் கோலாக‌ல‌ம்.
            ~~~
 
நகரெங்கும் பால‌ம்
அமைப்போம்.
அந்த‌ காண்டிராக்டில்
ஓர் ஊழல் செய்வோம்.
அர‌சிய‌ல்வாதி.
            ~~~

கல்லறைப் பூக்கள்

Loneliness
நேற்றுவரை
தென்றலாய் தீண்டிவிட்டு,
இன்று தீயாய் சுடுகிறாய்.
 
நேற்றுவரை
பூவாய் வாசம் தந்துவிட்டு,
இன்று புயலாய் தாக்குகிறாய்.
 
உனை சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்,
எதையாவது பேசிவிடத்
துடிக்கிறது மனசு.
 
முதல் புள்ளியை தேடியபடி
என் மூச்சுக் காற்று நீளும்முன்பே,
ஆழ்ந்த மெள‌ன‌ம் கொண்டு
என் சிந்தனையை சிறைப்பிடித்து
முத‌ல் புள்ளியை
முற்றுப்புள்ளியாக்கிவிடுகிறாய்.
 
ச‌ண்டையிட‌ வ‌ந்த‌வ‌ன்
ச‌மாதான‌மாய் ம‌ண்டியிட்டுப் போவ‌து,
உன் முன் ம‌ட்டுமே சாத்திய‌ம்.
 
நெஞ்ச‌த்திலே சினேகம் த‌ந்தாய்,
விழிகளிலே காதல் த‌ந்தாய்,
ஸ்ப‌ரிசத்தால் ப‌ர‌வ‌ச‌ம் த‌ந்தாய்,
ஆனால்,வார்த்தைக‌ளில்
வ‌ன்முறை த‌ந்துவிட்டு,
வாச‌ ம‌ல‌ரை நேசிக்க‌ச் சொல்கிறாய்.
 
வில‌கியிருப்ப‌துதான்
உன் விருப்ப‌மென்றால்,
வில‌க‌லுக்கான கார‌ண‌த்தையாவ‌து
சொல்லிவிடு,
விருப்பமாய் நீ வாழவே,
விடைபெறுகிறேன்.
 
வார்த்தைக‌ளில் விள‌ங்காத‌
நம் உற‌வின் நெருக்க‌த்தை
என் க‌விதை ம‌ட்டும்
விள‌க்கிடுமா என்ன‌?

கண்ணீர் காலங்கள்

Eyes 

உன்னிடம் மனம் விட்டுப்பேச,
வம்பு பேசி அரட்டையடிக்க,
உன் தோள்சாய்ந்து ஆறுத‌ல் தேட‌,
க‌வ‌லை மறந்து
உன் க‌ர‌ம் ப‌ற்றி முத்த‌மிட‌,
ஆயிர‌ம் விச‌ய‌ங்க‌ள் உண்டு என்னிட‌ம்…

ஏக்க‌த்தின் எதிரொளியாய் நானிருக்க‌,
நிராக‌ரிப்பின் நெடுவுருவ‌மாய் நீயிருக்க‌,
விரும்பி வ‌ந்தாலும் வில‌கியே இருக்கிறாய்…

இட‌ம் மாறிய‌தால் உன் இத‌ய‌ம் மாறிய‌தோ?
க‌ண‌ப்பொழுது கோவ‌த்தில்
ந‌ம் ந‌ட்பும் காலாவ‌தியான‌தோ?

சோக‌ங்களை என் சொந்த‌மாக்கிவிட்டு
சென்ற‌தினால்,
என் ச‌ட‌ல‌ம் எரிந்து சாம்ப‌லாகும் வரை,
என் புல‌ம்ப‌லும் ஓய‌ப்போவ‌தில்லை.

அதுவ‌ரை, நீ எழுதிவிட்டுப்போன‌,
என் விழியோர‌ம் வ‌ழியும்,
க‌ண்ணீர் க‌விதைக‌ளை யார் வாசிப்ப‌து?