மெளனத்தின் பேரோலம்

Image

நேசிப்பவளை மறப்பதும்/மறுப்பதும்
சாத்தியமில்லா ஒன்று,
என் எல்லை எதுவென்று தெரிந்தே
தள்ளிவைத்திருக்கிறாய் …

அமமணமாய் திரியும் உண்மைகளுக்கு
ஆசை ஆசையாய் ஆடை தைக்கிறாய்,
தைத்த ஆடைக்கு என் பெயர் சூட்டியே
அழகும் பார்க்கிறாய் …

சமயங்களில் முறைக்கிறாய்
முன்பின் தெரியாததுபோல் முழிக்கிறாய்
கேட்டால் அன்பை பேராழிக்குள் வைத்து
வழி மறந்தேன் என விழிவிரிய சிரிக்கிறாய் …

பசித்தும் புசிக்க முடியா வலியில் நான் …

உன்னை தூஷிப்பது
என் தொழில்யென சபிக்கிறாய்
உயிர் குடித்து உண்டிப்புணரும்
மிருகமென்கிறாய்

புரிந்துகொள்வ‌தே இல்லையென
புகார் அளிக்கிறாய்
என்ன சொன்னாலும்
மெய்யதிர குதிக்கிறாய் …

என் தரப்பு நியாயங்களை நிராகரிக்கிறாய்
நிதர்சனம் புரியாமலே என்விருப்பத்தை
விஷமென்கிறாய்…

உள்ளதின் உள்காயத்தில்
உன்பெயரெழுதி
நிரந்தரமாய் தண்டிப்பேன்
என மிரட்டுகிறாய்

தள்ளியிருப்பதற்கு
தன்னிலை விளக்கம் கேட்கிறாய்,
ஆனால் என்னிலை விளக்கினால்
குரல்வளை நெரிக்கிறாய் ..

ஆண்டுகள் பலகடந்தாலும்
என் அன்பிற்கு அமிலம்
ஊற்றியே அழிக்கிறாய் ..

என் மொழி புரியாதென்கிறாய்
என் மெளன‌த்தை மொழிபெயர்த்தால்
குய்யோ முறோவென குதிக்கிறாய்…

என்ன சொன்னாலும்
ஏற்புடையதாய் இல்லையென்கிறாய்..

என்செய்வேன் சகி
நான்னென்ன அனுமானா
மார்கிழித்து உன்முகம் காட்ட..

என்னுள் நீக்கமற நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை புணர்ந்தபடி
பொழுதைகழிப்பதைவிட
வேறு வழில்லையெனக்கு …

மார்ப்பொடிந்த என் மரக்கிளையில்
வந்தமரும் பறவை(கள்) குறித்து
உவகைகொள்வதும் கவலைகொள்வதும்
நான் மட்டுமே அறிந்தத அந்தரங்கம் ..

என் அன்பே புரியாத உனக்கு
என் ஆழ்மனதின் படிம‌ங்களை
படித்து காட்டமுடியா
இயலாமையில் நான் …

Advertisements